சென்னை: சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.
இதையடுத்து, சென்னை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முழுவதும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவலர்கள் மெட்டல் டிடெக்டா் மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டுகளைக் கண்டறியும் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்ட நிலையில், எந்த வெடிபொருளும் சிக்கவில்லை.
“மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் தேடினோம். ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் இல்லை,” என்று காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின்னஞ்சலில், “முதல் குண்டு பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் வெடிக்கும். அங்கு 2 கிலோ வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது.
“குண்டு வைக்கப்பட்டுள்ள மற்ற இடங்கள் குறித்து தெரிந்துகொள்ள விரும்பினால் 2,500 பிட்காயின்களை எனக்கு அனுப்பவேண்டும். இல்லையெனில் கூறமுடியாது.
“இதனை காவல்துறையினா் சாதாரணமாக எடுத்துக்கொண்டால் சென்னையில் பல இடங்களில் குண்டுமழை பொழியும்,” என்றும் அதில் செந்தில் என பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது என்றும் காவல்துறையினா் தெரிவித்தனா்.
இதையடுத்து, சென்னை முழுவதும் காவலர்கள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டு, வாகனச் சோதனையும் அதிகரிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடைசியில், மின்னஞ்சல் தகவல் வதந்தி எனத் தெரியவர, மின்னஞ்சலை அனுப்பியவர் குறித்து சைபா் குற்றப்பிரிவு காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.