சென்னை: தமிழ்நாட்டில் புதிய அணு உலைகளை அமைப்பது தொடர்பாக இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தென் தமிழகத்தின் பாதுகாப்புக்கு கூடங்குளம் அணு உலைகள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாகவும் அவற்றை மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், புதிய அணு உலைகளை அமைக்க ஒப்பந்தம் செய்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் அமைக்கப்பட்டால் மொத்தமுள்ள எட்டு உலைகளிலும் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள்களின் கழிவுகளும் அங்குதான் சேமிக்கப்படும். அது ஒட்டுமொத்த தமிழகத்தையும் கேரளத்தையும் அணுகுண்டு குவியல் மீது அமர வைப்பதற்கு ஒப்பாகும். மின்னுற்பத்தி என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு இவ்வளவு பெரிய ஆபத்தை மத்திய அரசு ஏற்படுத்தக்கூடாது,” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் காயல்பட்டினத்தில் இரு நாள்களில் கொட்டிய 116 செ.மீ மழை கூடங்குளத்தில் பெய்து அணு உலைகளில் வெள்ளம் ஏற்பட்டால் என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டை பேரழிவில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால், கூடங்குளத்தில் புதிய அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்றும் அங்கு ஏற்கெனவே நடைபெற்று வரும் அணு உலை கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் மேலும் கூறியுள்ளார்.