தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜயகாந்துக்கு பிரியாவிடை கொடுத்த தொண்டர்கள், ரசிகர்கள்

2 mins read
f1274283-191c-45a7-aa46-97c4703ee326
தீவுத்திடல் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் அஞ்சலி செலுத்த ஏராளமானோர் குவிந்தனர். - படம்: இணையம்

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நல்லடக்கம் வெள்ளிக்கிழமை மாலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இறுதிச்சடங்கில் சுமார் 200 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் அடக்கம் நடைபெற்றது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில் இறுதி ஊர்வலம், சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த செய்யப்பட்ட பல்வேறு ஏற்பாடுகளுக்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீவுத்திடல் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் அஞ்சலி செலுத்த ஏராளமானோர் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறினர்.

பாதுகாப்புப் பணியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். வெள்ளிக்கிழமை மாலை தீவுத்திடல் பகுதியில் இருந்து விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இறுதிச் சடங்குகளுக்கு முன்னர் 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக இறுதிச் சடங்கில் பொதுமக்கள் பங்கேற்க இயலாது என்றும் விஜயகாந்தின் குடும்ப உறுப்பினர்கள், நெருக்கமான நண்பர்கள் உள்ளிட்ட 300 பேர் மட்டுமே பங்கேற்க இயலும் என்றும் அறிவிக்கப்பட்டது.

விஜயகாந்திற்கு மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், திரை உலகத்தினர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் ரஜினி, கமலஹாசன் உள்ளிட்டோர் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு தங்கள் நண்பருக்கு பிரியா விடை கொடுக்க வந்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். வெளிநாட்டுப் படப்பிடிப்பில் இருப்பதால் நேரில் வர இயலாத நடிகர் அஜித், தொலைபேசி மூலம் விஜயகாந்த் குடும்பத்தாரைத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

தமிழ் திரை உலகம் சார்பில் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வெள்ளிக்கிழமை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன.

இறுதிச்சடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்