நெல்லை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகள் அரசியல் கட்சிகள் பாணியில் மேற்கொள்ளப்பட்டு இருந்ததாகவும் விஜய் மிக விரைவில் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அண்மையில் கொட்டித் தீர்த்த கன மழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என விஜய் உத்தரவிட்டு இருந்தார்.
மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை, உணவுப் பொருள்களை அதிகமாக வழங்க அவர் மக்கள் இயக்க நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்திப்பார் என மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறி வந்தனர். இதற்கேற்ப சனிக்கிழமை (நேற்று) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் விஜய்.
இதற்காக சென்னையில் இருந்து அவர் தனி விமானம் மூலம் தூத்துக்குடி சென்றடைந்தார். பின்னர் பாளையங்கோட்டை பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது ஆயிரம் பேருக்கு அவர் தன் கைப்பட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்டவர் களுக்கு விரைவில் மற்ற உதவி கள் வழங்க ஏற்பாடு செய்யப் படும் என்றும் அவர் உறுதி அளித்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி யின்போது தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பியவர்களுடன் அவர் ‘செஃல்பி’ படம் எடுத்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த இரண்டாண்டுகளாக விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இலவச சட்ட உதவி மையம், இரவு நேர பாடசாலை உள்ளிட்ட திட்டங்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் செயல்படுத்தி உள்ளனர்.
10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டது. தற்போது அரசியல் கட்சி களுக்கு இணையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிக் கரம் நீட்டி உள்ளார் விஜய்.
இதன் மூலம் தமது அரசியல் பயணத்திற்கான பாதையை அவர் ஒவ்வொரு கட்டமாக அமைத்து வருகிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விஜய் தன் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.