பிரதமர் மோடி வருகை: விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி வருகை: விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு

1 mins read
55e3d384-f9d8-4509-b136-7628ca128fdc
ஆங்காங்கே வாகனச் சோதனையிலும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: நாளை செவ்வாய்க்கிழமை திருச்சியில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வருகை மேற்கொள்கிறார். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் உட்புறங்களில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினரும் விமான நிலையத்தின் வெளிப்புறத்திலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழிநெடுகிலும் மாநகரக் காவல்படையினரும் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ள பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.10 மணிக்கு திருச்சி அனைத்துலக விமான நிலையத்துக்கு வருகிறார்.

பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இவ்விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

அதன்பின்னர் மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகையளிக்கும் பிரதமர் மோடி அங்கு ரூ.1,200 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

பின்னர் பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை அறிமுகப்படுத்தி வைத்தபின்னர் தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்குச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் வருகையை ஒட்டி ஆளில்லா சிறிய ரக வானூர்திகள் (ட்ரோன்) பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்