மழை, வெள்ளத்தால் ரூ.25 கோடி மதிப்பிலான துணிப்பொருள்கள் சேதம்

2 mins read
8760f249-01d6-43d9-b9d6-29cfa484408a
படம் - ஊடகம்

கரூர்: தென் மாவட்டங்களில் அண்மையில் பேய்மழை பெய்தது. இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தூத்துக்குடி துறைமுகம் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி மதிப்பிலான துணிகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூர் மாவட்டத்தில் 600க்கும் அதிகமான ஜவுளி உற்பத்தியாளர்களும் ஏற்றுமதி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

இங்கு சன்னல் திரை, தலையணை உறை, மேசை விரிப்புகள், கைக்குட்டை, சோபா விரிப்பு, துண்டு உட்பட வீட்டு உபயோகத்துக்குத் தேவைப்படும் துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த ஜவுளிப் பொருள்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், ஆண்டுக்கு, 6,500 கோடி ரூபாய் வரை அன்னியச் செலாவணி வருவாய் கிட்டி வருகிறது. இதுகுறித்து, கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கரூரில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்ட வீட்டு உபயோகத்துக்கான துணிகள் அங்குள்ள கிடங்குகளில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்தன. “பெரும் மழை, வெள்ளத்தால் கிடங்குகளில் மூன்று அடி உயரத்திற்கு தண்ணீர் புகுந்த நிலையில், அட்டைப் பெட்டிகளில் இருந்த துணிகள் நனைந்து நாசமாகி விட்டன. “இரு நாள்களுக்கு இதுகுறித்து எந்த தகவலும் கரூரில் உள்ள ஜவுளி நிறுவனங்களுக்கு தெரியாது. தூத்துக்குடிக்கு நேரில் சென்று பார்த்தபோதுதான் உண்மை நிலவரம் புரிந்தது.

“ஏறக்குறைய ரூ.25 கோடி மதிப்பிலான துணிகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து, காப்பீடு நிறுவனங்கள் உடனடியாக ஆய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“நல்ல நிலையில் இருக்கும் சரக்குகளை ஏற்றுமதி செய்யவும், சேதமடைந்த துணிகளுக்கு கிடங்குகளின் சார்பில் செய்யப்பட்டிருக்கும் காப்பீடு வாயிலாக ஈட்டுத்தொகை பெறவும் கிடங்கு நிர்வாகிகளின் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்