உச்ச நீதிமன்றம் அறிவுறுத்து: ஆளுநர், முதல்வர் சந்திப்பு

2 mins read
fb6ee639-0522-4f2a-94f9-b052bc2626b3
ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி தமிழக ஆளுநரும் முதல்வரும் சனிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக ஆளும் தரப்பு குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநரும் முதல்வரும் நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என அறிவுறுத்தியது.

அதையேற்று சனிக்கிழமை மாலை ஆளுநர் ரவியை நேரி்ல் சந்தித்துப் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அப்போது நிலுவையில் உள்ள மசோதாக்கள், முக்கியமான கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் அவர் வலியுறுத்தியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஆளுநருடனான சந்திப்பின்போது, பல மாதங்களாக அவரிடம் நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று முதல்வர் வலியுறுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கியமான மசோதாக்களை, அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையில், தேவையின்றி அதிபருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதைத் திரும்பப் பெற்று, அவற்றுக்கும் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டார்,” என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை மனதில்கொண்டு, ஆளுநர் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும் கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டும் எனவும்  முதல்வர் கேட்டுக்கொண்டதாக அரசு கூறியுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆளுநர், முதல்வர் இடையேயான சந்திப்பு சுமுகமாக நடைபெற்றது என்றார்.

தமிழக அரசு இரண்டாவது முறையாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 21 மசோதாக்களில் 20 மசோதாக்களை ஆளுநர் இரண்டாவது முறையாக அதிபருக்கு அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்