விவசாயத்துக்கு உதவிய பாம்பு: நல்லடக்கம் செய்த விவசாயி

விவசாயத்துக்கு உதவிய பாம்பு: நல்லடக்கம் செய்த விவசாயி

2 mins read
7832122c-e19f-4a68-8b39-fc6698a2ee6a
பாம்புக்கு பாடை கட்டி, இறுதி ஊர்வலம் நடத்தினார் விவசாயி கண்ணன். - படம்: ஊடகம்

தஞ்சை: விவசாயப் பணியில் தனக்குப் பெரிதும் உதவிய பாம்புக்கு விவசாயி ஒருவர் பாடைகட்டி தாரை தப்பட்டையுடன் நல்லடக்கம் செய்துள்ளார்.

விவசாயிகளின் தோழன் என்பதற்கு இந்தப் பாம்பு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியதாக விவசாயி கண்ணன் கூறினார்.

இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது விளை நிலத்தில் எலித்தொல்லை அதிகரித்து வந்துள்ளது. இதனால் பயிர்கள் சேதமடைவதைக் கண்டு கண்ணன் கவலை அடைந்தார்.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது வயலுக்கு அருகே ஆறடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்றைக் கண்டுள்ளார் கண்ணன். அந்தப் பாம்பை அடிக்க முற்படுவதற்குள் அது வேகமாக அவரை கடந்து போயுள்ளது. பாம்பு தன்னைக் கடிக்கவில்லை என்பது கண்ணனுக்கு வியப்பளித்தது.

இந்நிலையில், அவரது வயலில் இருந்த எலிகளை சாரைப்பாம்பு வேட்டையாடத் தொடங்கியது. இதனால் எலித்தொல்லைக்குத் தீர்வு ஏற்பட்டதாக கண்ணன் மகிழ்ந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் இவரது நிலத்திற்கு அருகே உள்ள பகுதியில் சாரைப்பாம்பு இறந்து கிடந்தது. இதனால் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்த விவசாயி கண்ணன், தனக்கு உதவிய அந்தப் பாம்பை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய முடிவெடுத்தார். இதன் மூலம் அந்தப் பாம்புக்கு நன்றி செலுத்த முடியும் எனக் கருதிய கண்ணன், மனிதர்களுக்கு நடக்கும் இறுதிச் சடங்கைப் போன்று அந்தப் பாம்புக்கும் பாடைகட்டி, இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தார்.

பாம்புக்கு பன்னீர் தெளித்து, மஞ்சள் பொடி தூவி அதன் உடலை தாரை தப்பட்டையுடன் சுமந்து சென்று அருகில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்தார் விவசாயி கண்ணன்.

இது தொடர்பான புகைப்படங்களும் காணொளியும் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்