திருச்சி விமான நிலைய புதிய முனையத்தைத் திறந்து வைத்தார் மோடி

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தைத் திறந்து வைத்தார் மோடி

2 mins read
b174884d-58f1-4c4c-b441-1a03d09946e0
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்ததுடன் இந்திய பிரதமர் மோடி, திருச்சியில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். - படம்: தமிழக ஊடகம்
multi-img1 of 4
Google News Preferred Icon

திருச்சி: திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமையன்று திறந்து வைத்தார்.

திருச்சி விமான நிலையத்தில் 1,112 கோடி ரூபாய் மதிப்பில் இந்தப் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “வணக்கம்... எனது தமிழ் குடும்பமே.. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கினார்.

அழகான தமிழகத்துக்கு வருகை புரிவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றார் பிரதமர் மோடி. குறிப்பாக இப்புதிய திட்டங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

கடந்த மாதம் பெய்த கனமழை, வெள்ளத்தால் தமிழக மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியிருப்பது வருத்தம் அளிப்பதாகவும் வெள்ள பாதிப்பில் இருந்து மீள தமிழக மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாகக் கூறிய அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவையொட்டி அவரது குடும்பத்துக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும்கூட விஜயகாந்த் ‘கேப்டன்’தான் என்றார்.

மேலும், மற்ற அனைத்தையும்விட விஜயகாந்த் இந்திய தேசத்தை மிகவும் நேசித்ததாகவும் அவர் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,100 கோடி செலவில் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய முனையம் ஆண்டுதோறும் 44 லட்சம் பயணிகளைக் கையாளும் வசதிகளைக் கொண்டுள்ளது.

இதற்கான திறப்பு விழாதான் இந்தப் புத்தாண்டில் தாம் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி என்றார் பிரதமர் மோடி.

முன்னதாக திருச்சி வந்தடைந்த பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்.

அப்போது பாரதிதாசனின், “புதியதோர் உலகம் செய்வோம்” என்ற வரியைக் குறிப்பிட்ட அவர், தைரியமான (துணிச்சலான) புதிய உலகைப் படைக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம் என்றார்.

குறிப்புச் சொற்கள்