கீழடியில் 9 மாதங்களில் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட 4.5 லட்சம் பார்வையாளர்கள்

1 mins read
b4f9861b-38fe-4afc-9d11-cac82deb00fa
அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் மக்கள். - படம்: ஊடகம்

கீழடி: கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை ஏறக்குறைய 4.5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்களை சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெகுவாகக் கண்டு ரசிப்பதாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீழடி அகழாய்வின்போது தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் ஏராளமான தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.

அவை அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் இரண்டு ஏக்கரில் பத்து கட்டட தொகுதிகளுடன் ரூ.18.40 கோடி செலவில் இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. அங்கு 13,800 பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்தாண்டு மார்ச் 5ஆம் தேதி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பின்னர் நாள்தோறும் குறைந்தபட்சம் 1,500 பேர் வந்து செல்கின்றனர். தற்போது நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

2,600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருள்களைப் பார்க்க முடியும் என்பதால் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகை தருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்