தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

2 mins read
9e6c7b21-3b8f-4de2-8dc5-091c83950485
கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

புதுடெல்லி: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்துக்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டு்ம் என மாநில அரசு உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தக் கையெழுத்து இயக்கத்துக்குத் தடைவிதிக்கக் கோரி, வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இம்மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, இன்றைய சூழலில் மாணவர்கள் சிறந்த அறிவாளிகளாக உள்ளனர் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மாணவர்கள் விரும்பி கையெழுத்திடுவதை எப்படி தடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் பள்ளி களில் நடத்தப்படும் நிலையில், இதில் கையெழுத்திட மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்றும் இ்ந்தக் கையெழுத்து இயக்கத்தினால் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

எனினும் நீதிபதிகள் இந்த வாதத்தை ஏற்க மறுத்தனர்.

கையெழுத்து இயக்கத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்றால் அதனை எப்படித் தடுக்க முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இளையர்கள் இடையே காணப்படும் விழிப்புணர்வைக் கருத்தில் கொள்ளும்போது, நீட் உட்பட நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அவசியம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கையெழுத்து இயக்கம் போன்ற பிரசாரங்களின் பின்னணியில் உள்ள நோக்கங்களை மாணவர்கள் புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்