ஜனவரி 21ல் சேலத்தில் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு

1 mins read
d4fea149-3aa0-4236-9805-37a645fc824c
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு வரும் ஜனவரி 21 (ஞாயிறு) அன்று நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், “மிச்சாங் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஜனவரி 21 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலத்தில் நடைபெறும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன் பாளையத்தில், திமுக இளைஞரணியின் மாநில மாநாடு கடந்த மாதமே நடைபெறவிருந்தது. மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று திமுக மாநில இளைஞர் அணி செயலாளர்களை சந்தித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

ஆனால் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை இளைஞரணி மாநாடு மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஒரு கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சேலத்தில் நடைபெறவுள்ள மாநாடு தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் மாநாடாக நடப்பதால், இளைஞர்களே உரிமைகளை வென்றெடுக்க ஒன்று திரள்வோம். மத்திய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய நிதி உரிமை, கல்வி உரிமை ஆகியவற்றை மீட்டெடுக்கும் மாநாடாக இம்மாநாடு அமைய வேண்டும். எனவே, அனைத்து நிர்வாகிகளும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தோடு பங்கேற்று மாநாட்டை வெற்றிகரமாக வழி நடத்த வேண்டும்,” என்று பேசினார்