தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்க வளையலை கூட்டில் வைத்திருந்த காகம்: கோழிக்கோட்டில் வினோதம்

2 mins read
1cff2d08-b25d-46c2-83a0-c64c48dd504f
காகத்தின் கூட்டில் உள்ளது தங்க வளையல். பின்னர் இது மீட்கப்பட்டது. - படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: காணாமல் போன ஃபாத்திமா என்ற சிறுமியின் வளையல், காகத்தின் கூட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சுவாரசியமான சம்பவம் கோழிக்கோட்டில் நடந்துள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள காப்பட் பகுதியைச் சேர்ந்தவர்கள் நசீர்-ஷரீபா தம்பதியர். இவர்களது மகள் ஃபாத்திமா ஹைபா, ஒன்றாம் வகுப்பில் படித்து வருகிறார்.

அண்மையில், குடும்பத்துடன் திருமணத்துக்குச் சென்று திரும்பியவர்கள் தங்கள் நகைகளைக் கழற்றி வைத்தனர். சிறுமி ஃபாத்திமாவும் தான் அணிந்திருந்த 6 கிராம் எடையுள்ள தங்க வளையலை ஒரு தாளில் சுற்றி மேசையின்மீது வைத்துள்ளார்.

நகையைப் பத்திரமாக எடுத்து வைக்குமாறு மகளிடம் தாய் ஷரீபா கூறியிருக்கிறார். ஆனால், சிறுமி அதைப் பத்திரமாக எடுத்து வைக்க மறந்துபோய்விட்டார்.

இந்நிலையில், 10 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக குடும்பத்தினர் தயாரானபோது, மகளின் வளையல் காணாமல் போனது தெரியவந்தது.

சிறுமியிடம் கேட்டபோது தாளில் சுற்றி மேசை மீது வைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால், மேசை மீது தங்க வளையல் இல்லை. இதனால், சிறுமியின் குடும்பத்தினர் மனவேதனை அடைந்தனர்.

இந்நிலையில், ஷரீபாவின் உறவினரான சுலைகாவும் அண்டை வீட்டைச் சேர்ந்த சாந்தாவும் காகம் ஒன்று பிளாஸ்டிக் வளையலை தூக்கிச் செல்வதைப் பார்த்ததாக ஷரிபாவிடம் தெரிவித்தனர்.

மகளின் தங்க வளையலையும் காகம் தூக்கிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்ததை அடுத்து, ஷரிபாவின் உறவினரான அகமது கோயா, காகம் கூடு கட்டியிருந்த தென்னை மரத்தில் ஏறிப் பார்த்தார். அப்போது கூட்டுக்குள் இருந்த சிறுமியின் தங்க வளையலை எடுத்து வந்து சிறுமியின் தாயிடம் கொடுத்தார்.

காணாமல் போன தங்க வளையல் கிடைத்ததும் புதையல் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியில் திளைத்தனர் குடும்பத்தினர்.

குறிப்புச் சொற்கள்