ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யக்கூடிய புதுத் திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ளது. இதனால், அரசுப் பேருந்துகளில் பெண்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதுவரை ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வாடகை டாக்சி போன்ற போக்குவரத்தை பயன்படுத்திய பெண்கள் இப்போது பேருந்தை நாடத் தொடங்கி உள்ளனர்.
இதனால், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிட்டதாகக் கூறி வேதனைப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தெலுங்கானா மாநிலத்தின் அரசுப் பேருந்துகளுக்குள் ஏறி அதில் இருந்த பெண் பயணிகளிடம் பாத்திரங்கள் ஏந்தியும் கை நீட்டியும் பிச்சை கேட்டு போராட்டம் செய்தனர்.
ஒரு நாளைக்கு ரூ.100 கூட வருமானம் கிடைக்காமல் தங்களது குடும்பம் பெரும் சிரமத்தில் அல்லாடி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பெண்களுக்கு மட்டும் இலவசப் பேருந்துப் பயணம் வழங்கப்படுவதற்கு ஆடவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து, ஆண்களுக்கும் தனியாக பேருந்துகளை இயக்கவும் தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

