‘வாய்ப்புகளைப் பயன்படுத்த தமிழ்நாட்டுடன் இணையுங்கள்’

‘வாய்ப்புகளைப் பயன்படுத்த தமிழ்நாட்டுடன் இணையுங்கள்’

2 mins read
923bddf3-8717-4dd5-b423-966ef59f9cf9
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டின் தொழில் மரபைக் கொண்டாடி தமிழகம் வழங்கும் எல்லையற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள எங்களோடு இணையுங்கள் என அனைத்துலக முதலீட்டாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், இம்மாநாட்டில் நூற்றுக்கும் அதிகமான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் அதன் மூலம் ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளைத் திரட்ட தமிழக அரசு வியூகம் வகுத்துள்ளது என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடங்க உள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு மிகவும் கூடியுள்ளது என்றும் 30,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் தமிழ்நாட்டின் முன்னணி தொழில் அதிபர்களும் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

450க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள், 170 உலகப் புகழ்பெற்ற பேச்சாளர்கள், 50 உலக நாடுகளின் பங்கேற்பு என உலக முதலீட்டாளர் மாநாடு தமிழ்நாட்டின் தொழில் திறனை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமையும் என்று முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

“தலைமைப் பண்பு குறித்த 26 அமர்வுகள், குறு சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான காட்சி அரங்குகள், தமிழ்நாட்டின் தொழில் சூழலுக்கான காட்சி அரங்குகள், பல்வேறு உலக நாடுகளுக்கான காட்சி அரங்குகள், ‘ஸ்டார்ட் அப்’ தமிழ்நாடு காட்சி அரங்குகள் என தமிழ்நாட்டின் விந்தையைக் காணவும் தொழில் கூட்டிணைவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பங்கேற்பாளர்களுக்கு அற்புதமான வாய்ப்பினை இந்த மாநாடு வழங்கும்,” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜனவரி 7 (இன்று) ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரு நாள்களுக்கு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.

இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இம்மாநாட்டின் கருத்தரங்குகளில் ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகா் அரவிந்த் சுப்ரமணியன், இஸ்ரோ தலைவா் சோமநாத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகா்கள் சிறப்புரையாற்ற உள்ளனா்.

மாநாட்டின் அதிகாரபூா்வ பங்குதாரா்களாக சிங்கப்பூா், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜொ்மனி, டென்மாா்க், அமெரிக்கா ஆகிய ஒன்பது நாடுகள் உள்ளன என்றும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

ஏற்கெனவே அதிமுக ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை தமிழகத்தில் அனைத்துலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்