புதுக்கோட்டை: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி பகுதியில் சனிக்கிழமையான நேற்று சிறப்பாக நடந்தேறியது.
அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.
நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண குவிந்தனர். காளைகளை அடக்குபவர்களுக்கு இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகள், மிக்சி, கட்டில், வெள்ளிக் குடம், மின்விசிறி என பல்வேறு பொருள்கள் பரிசுகளாக அறிவிக்கப்பட்டதால் மாடுபிடி வீரர்கள் உற்சாகமடைந்தனர்.
இம்முறை 700க்கும் மேற்பட்ட காளைகளும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் களம் கண்டதால் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடந்தது. வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ள உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.