சென்னை: நாடு தழுவிய அளவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னையும் திருச்சியும் இடம்பெற்றுள்ளன.
தனியார் நிறுவனம் ஒன்று இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.
பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக அவர்கள் அளித்த மதிப்பெண்களின் அடிப்படையில், பத்து நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பத்து லட்சத்திற்கு அதிகமாகவும் குறைவாகவும் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
மொத்தம் 113 நகரங்களில் சுமார் ஆறு மாதங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 10 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள 49 நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சென்னைக்கு 48.42 மதிப்பெண்கள் கிடைத்தது.
இந்தப் பட்டியலில் 9வது இடத்தில் கோவையும் 11வது இடத்தில் மதுரையும் இடம்பிடித்துள்ளன.
இதேபோல் 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை உள்ள 64 நகரங்களின் பட்டியலில் திருச்சி முதலிடம் பிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இப்பட்டியலில் வேலூர் 2வது இடத்திலும் சேலம் 6வது, ஈரோடு 7வது, திருப்பூர் 8வது, நெல்லை 29வது, தஞ்சை 30வது, தூத்துக்குடி 31வது, திண்டுக்கல் 33வது இடங்களைப் பிடித்துள்ளன.
பெண்களுக்கான சமூக உள்ளடக்கத்தையும் தொழில் துறை உள்ளடக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சமூக உள்ளடக்கத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. நகர வாழ்வாதாரம், பாதுகாப்பு, பெண்களுக்கான பிரதிநிதித்துவம், பெண்களுக்கான அதிகாரம், காவல்துறையில் பிரதிநிதித்துவம், கல்வி அறிவு, பெண்களுக்கான மேம்பாட்டுத்திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நகரங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்களாக திருச்சியும் சென்னையும் முதலிடம் பிடித்திருப்பதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி காவல் ஆணையர் என்.காமினி, திருச்சி மாநகர் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து, உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், பெண்களின் தேவையை பல்வேறு நிலைகளில் நிறைவேற்றி வருவதாகவும் அவற்றுக்கான அங்கீகாரமாக சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னையும் திருச்சியும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

