சென்னை: திரைத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், சென்னை புறநகர்ப் பகுதியான பூந்தமல்லியில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், 500 கோடி ரூபாய் செலவில் திரைப்பட நகரம் அமையும் என்றார்.
ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தாலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது படைப்புத்திறனை வெளிப்படுத்துவதில் குறை வைத்ததே இல்லை என்றார்.
எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு படப்பிடிப்புத் தளங்களாக விரைவில் அமைக்கப்படும் என்றார் மு.க.ஸ்டாலின்.
“திரையுலகம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் முன்வைத்த கோரிக்கையை ஏற்று பூந்தமல்லி பகுதியில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும். 140 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இத்திரைப்பட நகரில் அனிமேஷன் உள்ளீட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்றார்.
இந்நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “சிலருக்கு எழுத்தாற்றல் இருந்தால் பேச்சாற்றல் இருக்காது. ஆனால் காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதி இரண்டிலுமே சிறந்து விளங்கினார். தந்தையின் பேரைக் காப்பாற்ற வேண்டும் என்பது முதல்வரின் லட்சியமாக உள்ளது. அவருக்கு வாழ்த்துகள்,” என்றார்.