சென்னை: உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு கிடைக்கப்பெற உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநாட்டின் இறுதியில் உரையாற்றிய அவர், எதிர்பார்த்ததைவிட அதிக முதலீடு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளதாகவும் 27 தொழிற்சாலைகளைத் திறந்து வைத்துள்ளதாகவும் முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்தப் புதிய முதலீடுகள் மூலம் 14 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக உலக முதலீட்டாளர் மாநாடு அமையும் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
“சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மகத்துவம் என்றென்றும் பேசப்படும். இந்த முதலீட்டாளர் மாநாட்டில் தமிழகத்தின் 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. முதலீடுகள் தொடர்ந்து செயல்வடிவம் பெறுவதை கண்காணிப்பேன்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உலக மூதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று 300 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்றும் இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை தமிழகம் பெற்றுள்ளது என்றும் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாநாட்டின் முதல் நாளன்று ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. மின்சாரத் துறையில் ரூ.1.75 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் இரண்டாம் நாளன்று மின்சார வாகனங்கள், விவசாயம், உணவுத்துறை, எதிர்காலப் பொருளியல் உள்ளிட்ட துறைகள் சார்ந்த தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றன.
தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள்:
தமிழகத்தின் தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் லட்சகணக்கான படித்த இளையர்களுக்கு தரமான வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என்றும் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
ஆர்வம் காட்டும் அமெரிக்க நிறுவனங்கள்:
தமிழகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையிலும் சூரிய சக்தி துறையிலும் முதலீடு செய்ய அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாக அமெரிக்க துணைத்தூதர் கிரிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரங்குகளை ஆர்வத்துடன் பார்வையிட்ட வெளிநாட்டினர்:
முதலீட்டாளர் மாநாட்டில் இடம் பெற்றிருந்த பல்வேறு அரங்குகளை பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அவற்றுள் புவிசார் குறியீடு பெற்ற பொருள்கள் இடம்பெற்ற அரங்கைப் பார்வையிட வெளி நாட்டினர் ஆர்வம் காட்டினர்.
காஞ்சிபுரம் பட்டு, ஈரோடு மஞ்சள், ஆத்தூர் வெற்றிலை, கோவில்பட்டி கடலை மிட்டாய், கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற 54 பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
கடலை மிட்டாய்களை வாங்கிச் சாப்பிட்ட வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அனைத்து பொருள்களின் தயாரிப்பு முறை குறித்து ஆர்வத்துடன் விவரங்களைக் கேட்டறிந்தனர்.
தமிழக புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்கள் தயாரித்து உள்ள இருசக்கர மின் வாகனங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.