மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்துடன் கூடிய திடல் ஜனவரி 23ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக அளவில் பிரசித்து பெற்றது. ஆண்டுதோறும் அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டை காண்பதற்கு ஆயிரக்கணக்கானோர் கூடுவர். வெளிநாடுகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அலங்காநல்லூருக்கு வருகை புரிவர்.
போட்டியை நடத்துவதற்கென தனி இடம் இல்லாததால் இதுநாள்வரை ஊருக்குள்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.
இதையடுத்து அலங்காநல்லூர் பகுதியில் உள்ள கீழக்கரை கிராமத்தில் உலகத்தரத்தில் ஜல்லிக்கட்டுக்கென திடலும் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து போட்டியைக் காண்பதற்கான அரங்கமும் கட்டப்பட்டுள்ளது.
66 ஏக்கரில், 44 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய திடலில்தான் நடப்பாண்டு போட்டிகள் நடைபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், சில பணிகள் முடிவடையாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு ஊருக்குள்தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய ஜல்லிக்கட்டு திடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 23 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி புதிய திடலில் ஜல்லிக்கட்டு நடைபெறும். எனவே நடப்பாண்டில் வரும் 15ஆம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
16ஆம் தேதி பாலமேட்டிலும் 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடைபெற உள்ளன. அலங்காநல்லூர் ஜல்லிகட்டுக்கான மூகூர்த்தக்கால் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.