தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறிய ராக்கெட்டுகளை ஏவுவதற்காகவே குலசேகரன் பட்டினத்தில் புதிய ஏவுதளம்: இஸ்ரோ தலைவர் விளக்கம்

1 mins read
c21e9790-0a0f-4d6f-a7cc-3e6062b1e718
குலசேகரன் பட்டினம் விண்வெளி ஏவுதளம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்திற்கான பணிகள் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் முழுமையடையும் என இந்திய விண்வெளி ஆய்வுக்கழக (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

அப்போது சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்காகவே தமிழகத்தின் குலசேகரன் பட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் கொரோனா தொற்றுப் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமானது என்றும் அது குறித்த ஆய்வு நீடித்து வருவதாகவும் அவர் கூறினார்.

“நூறு விழுக்காடு பணிகள் முடிந்துவிட்டதாக நம்பிக்கை ஏற்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மனிதர்களை நிலவுக்கு அனுப்புவது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களின் பாதுகாப்பும் முக்கியம்,” என்றார் சோம்நாத்.

குலசேகரன் பட்டினத்தில் அமைக்கப்படும் புதிய ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு மாற்றானது அல்ல என்றும் கூடுதல் ஏவுதளமாகவே அமைக்கப்படுகிறது என்றும் சோம்நாத் தெளிவுபடுத்தினார்.

‘குலசேரகன்பட்டினத்தில் இருந்து சிறிய ராக்கெட்டுகளை ஏவுவது கூடுதல் வசதியைத் தரும். இங்கிருந்து குறைந்த காலகட்டத்தில் 20 அல்லது 30 ராக்கெட்டுக்களை ஏவ முடியும். இதனால் விண்ணில் ஏவப்படும் சிறிய ராக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் அப்பகுதியில் பல தொழில் வளாகங்கள் உருவெடுக்கும்,” என்று சோம்நாத் கூறியதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்