சென்னை: கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாததையடுத்து அரசுடனான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துவிட்டதாக தமிழக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியிலிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகளை இயக்க மாட்டோம், நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளில் செல்வோர் செவ்வாய்க்கிழமை காலை உரிய பகுதிகளைச் சென்றடைந்த பின்னர் இறக்கி விடப்படுவர். அதன் பின் அப்பேருந்துகள் அங்கேயே நிறுத்தி வைக்கப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அரசுக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பொங்கல் பண்டிகைக்கு பொது மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

