மதுரை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக எக்காரணத்தைக் கொண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், அதிமுக யாருக்கும் அடிமையாக இருக்காது என்றார்.
“பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்த பிறகும் மறைமுகமாக கூட்டணி நீடிக்கிறது என் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.
“சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் முதல்வருக்கு காய்ச்சல் வந்துள்ளது.
“அதிமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு நிறைய திட்டங்களை வழங்கியது. காலஞ்சென்ற அப்துல் கலாம் நாட்டின் அதிபராக அதிமுகவின் மக்கள் பிரதிநிதிகள் வாக்களித்தனர்.
“சிறுபான்மை மக்களின் ஆதரவோடு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்,” என்றார் எடப்பாடி பழனிசாமி.
பாஜகவுடனான உறவைப் பொறுத்தவரையில் அதிமுக தெளிவான முடிவெடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

