அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான பிணை மனு: 12ஆம் தேதி தீர்ப்பு

1 mins read
3018ca96-ecfa-4340-9b10-a17d6c325afb
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். - படம்: ஊடகம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் பிணை கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் உயர் நீதிமன்றமும் செந்தில் பாலாஜியின் பிணை மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உடல் நிலையை கருத்தில் கொண்டு பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி.

அந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து, முதன்மை அமர்வு நீதிமன்றத்தை மீண்டும் நாடுமாறு செந்தில்பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டது.

இதன்படி, செந்தில் பாலாஜி பிணை கோரி மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஜனவரி 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் வழக்கின் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு வருகிற 12ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்