கன்னியாகுமரி: நாகர்கோவில் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்ப்பதாக கூறப்பட்ட 32 வயதான ஆடவர், அதே பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருங்கிப் பழகியதுடன் அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இதேபோல திட்டமிட்டு பல மாணவிகள், ஆசிரியர்களிடமும் பாலியல் வன்முறையில் அவர் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
மேலும் அவரது கைப்பேசியில் ஏராளமான பெண்களின் புகைப்படங்களும் காணொளிகளும் இருந்துள்ளன. பல பெண்களிடம் ஆபாசமாக பேசிய உரையாடலும் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் பல தனியார் பள்ளிகளில் பணியாற்றியதாகவும், அவ்வாறு பணியாற்றிய பள்ளிகளில் சிறப்பு பயிற்சிக்குச் செல்லும்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்றவற்றில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.
மேலும் அவர்களுடன் கைப்பேசியில் அடிக்கடி ஆசை வார்த்தைகள் பேசி, தனது வலையில் விழ வைத்துள்ளார். குறிப்பாக வெளிநாட்டில் வேலைபார்ப்போரின் மனைவிகளைக் குறி வைத்து, தனது கைவரிசையைக் காட்டியுள்ளார்.
அவரிடம் சிக்கிய மாணவிகள் மட்டுமின்றி, மாணவிகளின் தாயாரிடமும் தொடர்பு வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தன்னிடம் தொடர்பில் இருந்த பெண்களிடம் காணொளி அழைப்பில் பேசும்போது, அதனை ரகசியமாக பதிவு செய்யும் வேலையையும் பார்த்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. அவரது கைப்பேசியில் உள்ள பெண்களின் படங்களை வைத்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, அடையாளம் காணப்பட்ட ஒரு பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், அவர் ஒரு ஆசிரியர் என்பதும், அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்த ஆசிரியை, உடற்கல்வி ஆசிரியரிடம் சக ஆசிரியர் என்ற முறையில் பழகியதாகவும், ஆனால் அடிக்கடி கைப்பேசியில் பேசிய அவர், ஆசை வார்த்தை கூறி தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அதன்பிறகு அவருடன் ஏற்பட்ட தொடர்பைத் துண்டித்து விட்டதாகவும், ஆசிரியை கண்ணீர் மல்க அழுததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதேபோல பல பெண்கள் அவரது வலையில் சிக்கியுள்ளதாகவும், ஆனால் அவர்கள் பெயரை A, X என புனை பெயர்களில் தனது கைப்பேசியில் ஆசிரியர் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அவரது கைப்பேசியில் உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களிடம் புகார்களைப் பெற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த ஆடவர் தனது கைப்பேசியில் இருந்த பல காணொளிகள், படங்களை அழித்து இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, அதனை இணையக் குற்ற காவல்துறையின் உதவியுடன் மீட்கவும் முடிவு செய்துள்ளனர். தற்போது உடற்கல்வி ஆசிரியரை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.