காஞ்சிபுரம்: சாலையில் சென்று கொண்டிருந்தபோது மாடு முட்டியதில் உயரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். 72 வயதான இவருக்கு மனைவி, மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.
சில நாள்களுக்கு முன்பு மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்காக தனது மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார் துரைராஜ். அப்போது சாலையில் சென்ற மாடு ஒன்று அவரை வேகமாக முட்டித் தள்ளியது.
இதில் கீழே விழுந்த துரைராஜுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.
பின்னர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் துரைராஜ் மூளைச்சாவு அடைந்து விட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தார் முன் வந்தனர். துரைராஜ் வீட்டிற்கு நேரில் சென்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரது உடலடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. துரைராஜின் மனைவிக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.