சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமாகவும் கடலூர் மாவட்டத்தின் பாசன ஆதாரமாகவும் திகழும் வீராணம் ஏரியில் இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரால் பேரழிவை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்ட நச்சுகள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகள், வயல்களில் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் உரக்கழிவுகள் ஆகியவை பெருமளவு கலந்ததால்தான் வீராணம் ஏரியில் நீலப் பச்சைப் பாசி எனப்படும் கிருமி (பாக்டீரியா) உருவாகியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், மக்களுக்கு நோய்களை ஏற்படுத்தும் நச்சுக்கள் வீராணம் ஏரியில் கலப்பதை தடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
:நீலப் பச்சைப் பாசி அனைத்து வகையான நீர்நிலைகளிலும் காணப்படும். ஆனால் ஒரு கட்டத்தைத் தாண்டும்போது அது சுற்றுச்சூழலுக்கும் நீரை பயன்படுத்தும் மனிதர்களுக்கும் கடுமையான தீங்கை ஏற்படுத்தும்.
“மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய நீரில் ஒரு லிட்டருக்கு ஒரு மைக்ரோ கிராம் அளவுக்கு நீலப் பச்சைப்பாசி நச்சுக்கள் இருக்கலாம். ஆனால் வீராணம் ஏரியில் உள்ள தண்ணீரில் முதல் வகை நச்சு லிட்டருக்கு 17.72 மைக்ரோ கிராம் அளவுக்கும் இரண்டாம் வகை நச்சு 19.38 மைக்ரோ கிராம் அளவுக்கும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை மிகவும் ஆபத்தான அளவு என்று கூறப்படுகிறது.
“நீலப்பச்சைப் பாசி நச்சு கலந்த நீரை பயன்படுத்துவோருக்கு அரிப்பு போன்ற தோல் நோய்கள், கல்லீரல் நோய்கள், பார்கின்சன் நோய், அல்சைமர் நோய் போன்ற நரம்பியல் நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

