சர்ச்சை கருத்துகள் தெரிவித்த கார்த்தி சிதம்பரத்திற்கு காங்கிரஸ் மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ்

சர்ச்சை கருத்துகள் தெரிவித்த கார்த்தி சிதம்பரத்திற்கு காங்கிரஸ் மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ்

2 mins read
93a93d9b-633a-4cbf-ab43-8d92757629b1
கார்த்தி சிதம்பரம். - படம்: ஊடகம்

சென்னை: காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரத்திற்கு அக்கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் அவர் கட்சிக் கொள்கைக்கு எதிராக பேசி இருப்பதாகவும் அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த கார்த்தி சிதம்பரம், பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையான தலைவராக ராகுல் காந்தியைக் கருத முடியாது என்று குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பில்லை என்றும் அப்பேட்டியில் அவர் கூறியதாக தெரிகிறது. நாட்டில் உள்ள பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகளைச் செய்துதான் பாஜக தேர்தல்களில் தொடர் வெற்றிகளைப் பெற்று வருவதாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் அதற்கு நேர்மாறாக கருத்து தெரிவித்து இருப்பது காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக காங்கிரஸின் ஒழங்கு நடவடிக்கைக் குழு கார்த்தி சிதம்பரத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அடுத்த பத்து நாள்களுக்குள் அவர் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவராக தன்னை நியமிக்க வேண்டும் என கார்த்தி வலியுறுத்தி வந்தார். கட்சியை இளம் தலைமுறையினரிடம் ஒப்படைத்தால் அதன் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, தமக்கு ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் இருந்து எந்தவித நோட்டீசும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தமக்கு இத்தகைய நோட்டீஸை அனுப்ப மாநில ஒழங்கு கமிட்டிக்கு அதிகாரம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் கார்த்தி.

குறிப்புச் சொற்கள்