சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக துபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ராஜசேகரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
துபாய் துணைத்தூதர் மூலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.2,458 கோடி வசூலித்தது.
இந்நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி 109,225 பேர் பணத்தை முதலீடு செய்தனர். இந்நிலையில் நிறுவனத்தை நடத்தி வந்த ராஜசேகர் (44 வயது) அவரது மனைவி உஷா ஆகிய இருவரும் திடீரென தலைமறைவாகிவிட்டனர்.
இதையடுத்து தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராஜசேகரை துபாய் காவல்துறை அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தது.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது என்றும் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

