நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள குஜராத்தைச் சேர்ந்த நிபுணர் குழுக்கள் தமிழகம் வருகின்றன.
வரும் 26ஆம் தேதி தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் அடங்கிய இந்தக் குழு சென்னை வந்தடையும் என ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு சொகுசுப் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை நடந்தன. இது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலமும் பெறப்பட்டது.
இந்நிலையில் கோடநாடு பகுதியில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இணைப்புகள் குறித்து விசாரணைக் குழுவுக்கு கூடுதல் தகவல்கள் தேவைப்படுகின்றன.
அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் தொடர்பான பத்து மின்னிலக்க நாடாக்கள் சேகரிக்கப்பட்டு குஜராத்தில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
அவற்றை ஆய்வு செய்த நிபுணர்கள் நேரடியாகச் சென்று சில நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் கூடுதல் தகவல்களைப் பெற முடியும் என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து வருகிற 26ஆம் தேதி மற்றும் பிப்ரவரி முதல் வாரம் என இரண்டு கட்டங்களாக குஜராத் நிபுணர்கள் தமிழகம் வர உள்ளனர். இரு குழுவினரும் முதலில் திருச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல் தொலைபேசி நிறுவன அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக ஊடகத்தகவல் தெரிவிக்கிறது.

