சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இறை வணக்கம் நிகழ்ச்சி முடிந்ததும், சமூக நீதிப்பாடல் ஒலிபரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படும் என்று அவர் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் சமூக நீதிப்பாடலை ஒலிப்பரப்ப வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அண்மையில் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் விழுதுகள் என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி, பள்ளிக்கல்வி துறை சார்பில் உருவாக்கப்பட்ட சமூக நீதி உள்ளிட்ட பத்துப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடை வெளியிட்டார்.
அப்போது, இந்தப் பத்துப் பாடல்களில் சமூக நீதியை வலியுறுத்தும் பாடலை இறைவணக்கத்திற்குப் பிறகு பாடிவிட்டு மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்குச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இனி வரும் காலங்களில் அரசுப் பள்ளிகளில் காலை இறை வணக்கம் நிகழ்வின்போது சமூகநீதி பாடல் பாடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

