சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான தேடுதல் குழு அறிவிப்பாணைகளை திரும்பப் பெறுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூ.ஜி.சி.) விதிகளுக்கு உட்பட்டும் புதிய தேர்தல் குழுவை தமிழக அரசு விரைவில் அமைக்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பாரதியார், சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று பேர் கொண்ட தேடுதல் குழுவை அமைத்திருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதேபோல் தமிழக அரசும் தேடுதல் குழுவை அமைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் இந்தக் குழுக்கள் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணைகள் யூ.ஜி.சி. விதிகளுக்கு ஏற்ப அமையவில்லை என ஆளுநர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கும் ஆளுநர் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் ஆளுநர் சார்பில் அமைக்கப்பட்ட தேடுதல் குழு தொடர்பான மூன்று அறிவிப்பு ஆணைகள் திரும்பப் பெறப்படுகின்றன.
இதேபோல் தமிழக அரசும் தனது முந்தைய அறிவிப்பாணைகள் திரும்பப் பெறும் என நம்புவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான மாணவர்களின் உயர்கல்வி, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்படும் என தான் நம்புவதாக ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.

