பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த முதல்வர்

1 mins read
ab0428db-ce2d-47ff-8e6b-1ba2529a80b1
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் முதல்வர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

முன்னதாக தமது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பொங்கல் வாழ்த்தை பதிவு செய்தார்.

அதில், “சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்,” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

“இல்லங்களில் இன்பம் பொங்கிடும் தமிழர் திருநாளின் மகிழ்ச்சியைக் கூட்டிடும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 1.77 கோடி இலவச வேட்டிகளும் 1.77 கோடி புடவைகளும் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு, கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

“உழவர் பெருமக்களையும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் கதிரவனுக்கும். கால்நடைகளுக்கும் நன்றிகூறி மரியாதை செலுத்தும் நன்னாளாகவும், தமிழர் அனைவரும் ஓரினம் என்ற தமிழினத்தின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் பொன்னாளாகவும் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது,” என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்