அரசுப் பேருந்து வழித்தடத்தில் சிற்றுந்து இயக்க அனுமதிப்பது பற்றி நீதிமன்றம் கேள்வி

அரசுப் பேருந்து வழித்தடத்தில் சிற்றுந்து இயக்க அனுமதிப்பது பற்றி நீதிமன்றம் கேள்வி

2 mins read
b6572e1c-75f7-4411-8f57-bb3200270d92
படம்: - தமிழக ஊடகம்

மதுரை: அரசுப் பேருந்து வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க எவ்வாறு அனுமதி வழங்கப்படுகிறது? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஜான் விக்டர் தாஸ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: “கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் குறிப்பிட்ட வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒதுக்கப்பட்ட வழித் தடங்களுக்கு பதிலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் வழித் தடத்திலேயே சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

“அரசுப் பேருந்துகளுக்கான வழித்தடத்தில் சிற்றுந்துகளை இயக்குவதால் புறநகர் பகுதி மக்கள் போதுமான பேருந்து வசதியில்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும் சிற்றுந்துகளில் குறிப்பிட்ட அளவு பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும். ஆனால், அதைவிட அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். எனவே, அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித்தடத்தில் மட்டுமே சிற்றுந்துகளை இயக்கவும், இதை மீறும் சிற்றுந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “அரசுப் போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்கினால் அரசுக்கு இழப்பு ஏற்படும். தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. எந்த விதியின் அடிப்படையில் அனுமதி பெறாத வழித்தடத்தில் சிற்றுந்துகள் இயக்க அனுமதிக்கப்படுகிறது? மனுதாரர் தரப்பில் சிற்றுந்துகள் விதி மீறல் தொடர்பாக கூடுதல் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது,” என உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்