‘அயலகத் தமிழரின் தேவைகள் தீர்த்து வைக்கப்படும்’

‘அயலகத் தமிழரின் தேவைகள் தீர்த்து வைக்கப்படும்’

2 mins read
5d5dfa45-b588-402a-9d42-b793d92352f4
முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: அயலகத் தமிழர்களின் தேவைகளை தமிழக அரசு தீர்த்து வைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் தலைவர், 13 உறுப்பினர்களைக் கொண்ட அயலகத் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் அயலகத் தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் சென்னையில் அயலகத் தமிழர் தின விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீராலும் நிலத்தாலும் ஏன் நாடுகளாலும் கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் தமிழர்கள் எல்லாரும் ஒரே நிலத்தைச் சார்ந்தவர்கள் என்றும் தமிழ் அன்னையின் குழந்தைகள் என்றும் குறிப்பிட்டார்.

“எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை மறவாதீர்கள். தமிழ்நாட்டுக்கு வாருங்கள். தமிழுடன் இணைந்திருங்கள். எங்கு வாழ்ந்தாலும் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருந்திடுங்கள்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழகத்தில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த ‘எனது கிராமம்’ எனும் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களுடைய சேமிப்புகளை தமிழகத்தில் பாதுகாப்பாக முதலீடு செய்ய ஆர்வத்தோடு இருப்பதாக தெரிவித்தார்.

இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு அரசு, தொழில் நிறுவனங்களில் வெளிநாடு வாழ் தமிழர்கள் முதலீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

‘வேர்களைத் தேடி’ என்ற திட்டம் இந்த ஆண்டிற்கான முத்தாய்ப்பான திட்டமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இது போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் முதல்வராக மட்டுமல்லாமல் ஒரு தமிழனாகவும் இதைக் கண்டு தாம் அகமகிழ்வதாகவும் கூறினார்.

“வெளிநாடு வாழ் தமிழர்கள் அளித்துள்ள பல்வேறு புகார்களில் 53 புகார்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளன. தமிழகத்தில் நிலம் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டி.ஜி.பி தலைமையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

“வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் தமிழ் கற்றுத் தரப்படுகிறது. வெளிநாடுகளில் கைது செய்யப்படும் சூழலுக்கு ஆளாகும் தமிழர்களுக்கு சட்ட உதவிகள் அளிக்கப்படுகிறது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமக்கு உடல்நலம் சீராக இல்லை என்றும் தாம் உற்சாகமாக இல்லை என்றும் ஊடகத்தில் வெளியான தகவலை முதல்வர் திட்டவட்டமாக மறுத்தார். அந்த செய்தியைப் படித்தபோது தமக்கு சிரிப்புத்தான் வந்தது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்