அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 12,176 காளைகள், 4,514 வீரர்கள் முன்பதிவு

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 12,176 காளைகள், 4,514 வீரர்கள் முன்பதிவு

2 mins read
fa05f220-e899-46fd-801f-3b8efafb3cf3
ஜல்லிக்கட்டுப் போட்டி. - படம்: ஊடகம்

மதுரை: நடப்பாண்டில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 12,176 காளைகள் களமிறக்கப்படவுள்ளன. அவற்றை அடக்குவதற்கு 4,514 மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

இம்முறை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி சார்பில் ஆறு கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.

இம்மூன்று போட்டிகளிலும் சிறந்த காளைகள், சிறந்த வீரர்களுக்கு தலா மூன்று கார்கள் பரிசளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் வரும் 15,16,17ஆம் தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

தமிழக அரசின் சார்பில் நடைபெறும் இந்த போட்டிகளைக் கண்டு ரசிக்க வடமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இம்முறை போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு, வேட்டி, உள்ளிட்ட ஐந்து வகை நிச்சயப்பரிசுகள் வழங்கப்படும் என்றும் மாடுபிடி வீரர்களுக்கு கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியன வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

15ஆம் தேதி நடை பெறவுள்ள அவனியாபுரம் போட்டியில், 2,400 காளைகள், 1,318 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு 3,677 காளைகளும் 1,412 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்து இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இம்முறை 6,099 காளைகள் களம் இறக்கப்பட உள்ளன. அவற்றைப் பிடிப்பதற்கு 1,784 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

கடந்த ஆண்டு இம்மூன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் 9,701 காளைகள் பங்கேற்றன. அதேபோல் 5,099 மாடு பிடி வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வசூலில் முறைகேடு நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்கும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசு வழங்கியதில் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து தமிழக அரசு இவ்வாறு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
ஜல்லிக்கட்டு