தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகளின் நினைவாக ரூ.7.5 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய தாய்

2 mins read
8d1c0ba1-7ba0-4d9f-b5e9-0eed7f24f1bd
தனது நிலத்தின் பத்திரத்தை அதிகாரியிடம் அளிக்கும் பூரணம் அம்மாள் (இடது), அவரது மகள் ஜனனி. - படங்கள்: ஊடகம்

மதுரை: மறைந்த தனது மகளின் நினைவாக நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அரசுப்பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கிப் பெண் ஊழியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சென்று பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி பூரணம் அம்மாள். இவரது கணவர் உக்கிரபாண்டியன் 31 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பலியாகி விட்டார். கணவர் பார்த்த வங்கி வேலை இவருக்குக் கிடைத்தது.

அதன் பின்னர் தனது மகள் ஜனனியை வணிகத்துறையில் பட்டம்பெற வைத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார் பூரணம் அம்மாள்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகளும் காலமாகிவிட்டார்.

கணவர் இறந்த பின்னர் தனது மகளுக்காக மட்டுமே வாழ்ந்து வந்ததாகவும் மகள் இறந்த பின்னர் யாருக்காக வாழ வேண்டும் என்ற சலிப்பு ஏற்பட்டதாகவும் சொல்கிறார் பூரணம் அம்மாள்.

எனினும் மகள் கூறியது போல் தன்னால் இயன்ற அளவில் தான தர்மங்கள் செய்து வருவதாகக் கூறுகிறார்.

“கடந்த 1998ஆம் ஆண்டு எனது சகோதரருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கினேன். என் மகள் கூறியபடி கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை வழங்கி உள்ளேன்.

“இத்தகைய செயல்கள் மூலம் என்னுடைய மகள் எனக்கு அருகே வாழ்ந்து கொண்டு இருப்பதாக உணர்கிறேன்,” என்கிறார் பூரணம் அம்மாள்.

இந்நிலையில் மதுரை எம்.பி வெங்கடசேன் பூரணம் அம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.

“வாரி எடுப்பதே வாழ்வில் லட்சியம்’ என்று இருப்பவர்களுக்கு மத்தியில் ‘வாரி கொடுப்பதே வாழ்வின் பயன்’ என்று வாழும் பூரணம் அம்மாளை வணங்கி மகிழ்ந்தேன். அவரது கைகளைப் பற்றிக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு மக்கள் பிரதிநிதியே அல்ல.

“பூரணம் அம்மாள் வழங்கியுள்ள நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.7.5 கோடியாகும். இப்படிப்பட்ட நல்ல பணியை செய்துவிட்டு சத்தம் இல்லாமல் வங்கி ஊழியராக தனது அன்றாடப் பணியைச் செய்து கொண்டு இருக்கிறார்.

“இப்படிப்பட்டவர்கள்தான் உண்மையான மாணிக்கங்கள்,” என்று வெங்கடேசன் எம்.பி., தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்