புதுவை: இந்தியாவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஆய்வுகளின் பலனாக எதிர்காலத்தில் விண்வெளிக்கும் நிலவுக்கும் இந்தியர்கள் செல்வது சாத்தியமாகும் என்று ‘சந்திரயான் 3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.
புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சந்திரயான் கலம் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது, நிலவில் ரோவரின் பங்களிப்பு ஆகியவை குறித்து விரிவாக விளக்கங்கள் அளித்தார்.
“முதன்முதலாக தென்துருவத்தில் சந்திரயான் தரை இறங்கியது. சில மைக்ரோ விநாடிகள் தாமதித்து இருந்தாலும் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கும். ஆனால் அதை தவிர்த்துவிட்டோம்.
“சந்திரயான் விண்கலத்தில் உள்ள அனைத்து மின்சார, மின்னணு, இயந்திர பாகங்களுக்கும் எந்தவித சேதமும் ஏற்படாமல் அது தரை இறங்கியது.
“நமது ஆய்வுகளின் தொடர்ச்சியாக இந்தியர்கள் விண்வெளிக்கு செல்வது சாத்தியமாகும்போது, விண்வெளி அறிவியலில் முக்கியமான முன்னேற்றம் ஏற்படும்,” என்றார் வீரமுத்துவேல்.
பின்னர் மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்ததார்.

