நெல்லை: மத்திய உள்துறை அமைச்சின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு ஆலோசகர் கீர்த்தி பிரதாப் சிங் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடியில் திருச்செந்தூர், புன்னக்காயல், ஏரல், மெஞ்ஞானபுரம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களையும் நேரில் சந்தித்துப் பேசினர்.
அங்கிருந்து சனிக்கிழமை நெல்லை வந்த மத்திய அதிகாரிகள் குழுவினர் அங்கு வெள்ளச் சேத பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் முதலில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயனுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் கருப்பன்துறை பகுதியில் இடிந்து விழுந்த பாலத்தை ஆய்வு செய்தனர்.
மேலும், சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்பகுதிக்கு சென்று அங்கு கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
கடந்த டிசம்பர் 17,18 ஆம் தேதிகளில் பெய்த பலத்த மழை தென் மாவட்டங்களை அடியோடு புரட்டிப் போட்டது. இதையடுத்து மத்திய ஆய்வுக்குழு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்ய தமிழகம் வந்தது.
டிசம்பர் 20ஆம் தேதி நால்வர் கொண்ட மத்திய குழுவினர் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பல பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்ய முயன்றனர். அப்போது பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்கி இருந்ததால் சேத மதிப்பை சரியான முறையில் கணக்கிட முடியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, இரண்டாம் கட்ட ஆய்வில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. மேலும், இந்தப் பெருமழையை பேரிடராகக் கருதி, தமிழகத்துக்கு உரிய நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

