தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இருமொழிக் கொள்கையே தொடரும்: தமிழக அரசு

2 mins read
4e58fb4e-b225-4bc9-bc46-c31183d7b116
தமிழக அரசின் தலைமைச் செயலகம், சின்னம். - படங்கள்: ஊடகம்

சென்னை: தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என்றும் மும்மொழிக் கொள்கைக்கு ஒருபோதும் வாய்ப்பில்லை என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பெரியார் காட்டிய வழியில் தமிழக அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். மாறாக, தேசியக் கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு அரசு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்பிற்குரியது,” என்று தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் மும்மொழிக் கல்வி முறை கொண்டு வரப்படும் என்று நம்பிக்கை இருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அண்மையில் கூறியிருந்தார்.

மேலும், மத்திய அரசின் கல்விக் கொள்கையை தமிழக அரசு படிப்படியாக செயல்படுத்தி வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அவரது கருத்துக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை என்றும் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஏற்கெனவே செய்து கொண்டிருப்பதை தேசியக் கல்விக் கொள்கையில் இணைத்துவிட்டு, அந்தக் கொள்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்துவதாக மத்திய அரசு கூறுகிறது என்று தமிழக அரசு சாடியுள்ளது.

“மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்கு என சொல்லப்பட்ட பலவற்றை தமிழ்நாடு ஏற்கெனவே அடைந்துவிட்டது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்.

“அண்ணாமலை பகல் கனவு காண்பது போல் எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. கடந்த 2020ஆம் ஆண்டிலேயே செயற்கை நுண்ணிறிவுக்கென தமிழக அரசு ஒரு கொள்கையை வகுத்தது.

“செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்திட்டம், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான செய்தியை தமிழக முதல்வர் ஸ்டாலின், சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

“கணினிக் கல்வியைப் பயிற்றுவித்ததில் முன்னோடி மாநிலமாக விளங்கியதைப் போல் செயற்கை தொழில்நுட்பத்தையும் முதல் மாநிலமாகப் பயிற்றுவிக்கிறோம் என முதல்வர் தெரிவித்திருந்தார்.

“எனவே, தேசியக் கல்விக் கொள்கை உருவாக்குப்படுவதற்கு முன்பே ஒரு முன்னோடி மாநிலமாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது,” என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்