தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போகி புகைமூட்டத்தால் விமானச் சேவையில் பாதிப்பு: தென்மாவட்ட ரயில்களும் தாமதமாயின

1 mins read
3f630cc1-4f8f-4b43-bf8b-17db255ad4d6
பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன் பழைய பொருள்களைக் குவித்து வைத்து எரித்தனர். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: போகிப் பண்டிகை காரணமாக சென்னையில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் விமானச் சேவைகளும் பாதிப்புகளுக்கு உள்ளாயின.

போகிப் பண்டிகையை சென்னை மக்கள் வழக்கம்போல் உற்சாகத்துடன் கொண்டாடினர். தங்கள் வீட்டின் முன்பு பழைய பொருள்களை குவித்து தீமூட்டி எரித்தனர். இதனால் சென்னை முழுவதும் புகைமூட்டம் நிலவியது.

வாகனமோட்டிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகினர். ஞாயிற்றுக்கிழமை காலை சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அந்த அளவுக்குப் புகைமூட்டம் நிலவியது.

பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.

இந்நிலையில் சென்னையில் விமானங்களின் வருகை, புறப்பாடும் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ நிறுவன விமானம் தரையிறங்க முடியாததால் ஹைதராபாத்திற்குத் திருப்பி விடப்பட்டது என்றும் லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும் ஹைதராபாத்திற்குத் திருப்பி விடப்பட்டது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி, மும்பை, மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானங்கள் உரிய நேரத்தில் தரை இறங்க முடியாமல் சில நிமிடங்கள் வானில் வட்டமடித்தபடி இருந்தன. சென்னையில் இருந்து அந்தமான், புனே, மும்பை, டெல்லி, தூத்துக்குடி, மதுரை செல்ல வேண்டிய விமானங்களின் புறப்பாடும் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இதற்கிடையே கடும் பனிமூட்டம் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் சென்னை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்