நாகர்கோவில்: சமூக ஊடகம் மூலம் அறிமுகமான பள்ளி மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இளையரை நாகர்கோவில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அம்மாவட்டத்தில் உள்ள கலுங்கடி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தராஜ். 23 வயதான இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 11ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவியுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில் தன் நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் வசந்தராஜ். அந்த வீட்டில் அப்போது யாரும் இருக்கவில்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அம்மாணவியிடம் ஆசை வார்த்தை களைப் பேசி மூளைச் சலவை செய்துள்ளார் வசந்தராஜ்.
இதையடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய அவர் அதன் பிறகும் அப்பெண்ணை விடுவதாக இல்லை. மேலும் மூன்று நாள்கள் அம்மாணவியை அந்த வீட்டிலேயே சிறை வைத்ததுடன் அவ்வப்போது கட்டாயப்படுத்தி சீரழித்துள்ளார்.
மூன்று நாள்களுக்குப் பிறகு வசந்தராஜ் தன் பிடியில் இருந்து மாணவியை விடுவித்த பின்னர் தன் தாயாரிடம் விவரம் தெரிவித்து கதறி அழுதுள்ளார் அம்மாணவி. இதை யடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை வசந்தராஜை உடனடியாக கைது செய்தது.
விசாரணையின்போது அவர் மீது ஏற்கெனவே பாலியல் வழக்குப் பதிவாகியிருப்பது தெரிய வந்தது.
அவர் மேலும் சில பெண்களைச் சீரழித்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

