காணும் பொங்கல் பாதுகாப்புப் பணியில் மாநிலம் முழுவதும் 18,000 காவல்துறையினர் ஈடுபடுவர்

காணும் பொங்கல் பாதுகாப்புப் பணியில் மாநிலம் முழுவதும் 18,000 காவல்துறையினர் ஈடுபடுவர்

2 mins read
0fedb61f-f64d-4a90-8d4c-caf4af250beb
காணும் பொங்கல் தினத்தன்று சென்னை, மெரீனா கடற்கரையில் கூடிய கூட்டம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: காணும் பொங்கலையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 18,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

காணும் பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் கடற்கரை, பூங்கா, மிருகக்காட்சி சாலை, வணிக வளாகங்கள் எனப் பல்வேறு இடங்களுக்கு குடும்பத் துடன் செல்வது வழக்கம். இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த ஆண்டு மெரினா கடற்கரையில் மட்டும் 3 லட்சம் பேர் குவிய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மெரினாவில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடற்கரை பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவல்துறையினர் தடுப்பு அரண்களை அமைத்துள்ளனர்.

சமூக விரோதிகள் கை வரிசை காட்டுவதைத் தடுக்கவும் அவர்களது நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் ஆளில்லா சிறிய ரக வானூர்திகளைப் (ட்ரோன்) பயன்படுத்த உள்ளனர்.

மேலும், பெண்களிடம் அத்து மீறுபவர்களைத் தடுக்க பெண் காவலர்கள் சாதாரண உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்.

இதேபோல் மாநிலம் முழுவதும் காணும் பொங்கல் தினத்தன்று 50,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வர், ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களுடைய பொங்கல் வாழத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது. சில விழாக்களில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்