தமிழறிஞர்களுக்கு விருதுகள்

தமிழறிஞர்களுக்கு விருதுகள்

1 mins read
2c8b2535-0acd-4418-b9b1-1364b348c9f5
தமிழ் மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  - படம்: இந்து தமிழ்

சென்னை: தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவத்துக்கும் பெருந்தலைவர் காமராசர் விருது உ. பலராமனுக்கும் மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதிக்கும் வழங்கப்பட்டன.

அத்துடன், 2023ஆம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் ம. முத்தரசுக்கும் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பேராசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனுக்கும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் இரா.கருணாநிதிக்கும் வழங்கப்பட்டன.

தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்பட்டு, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

மேலும், சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதை சுப. வீரபாண்டியனும் டாக்டர் அம்பேத்கர் விருதை பி.சண்முகமும் பெற்றுக்கொண்டனர்.

இவ்விருதுடன் விருதுத் தொகையாக தலா 5 லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்பட்டு, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்