சென்னை: தமிழ்நாட்டில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்து இருந்த நிலையில், மு.க ஸ்டாலின் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
“திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலத்தால் அழிக்க இயலாத அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருக்கிறது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.
திருவள்ளுவர் படத்துக்கு பாஜகவினர் காவி உடை அணிவித்தது ஏற்கெனவே சர்ச்சையானது. தற்போது ஆளுநர் ரவியும் காவி உடையுடனான திருவள்ளுவர் படத்தை பகிர்ந்து, அப்படத்துக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார். திருவள்ளுவர் சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி எனவும் புகழ்ந்துள்ளார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
“வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது,” என தமது திருவள்ளுவர் தின வாழ்த்து செய்தியில் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்,” எனக் குறிப்பிட்டார்.
திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை என்றும் வள்ளுவரின் நிறம் மனிதநேயம்தான். வேண்டுமென்றால் வள்ளுவருக்கு கறுப்பு நிறம் போடலாம் என ஆளுநரின் சர்ச்சைப் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழியும் கருத்து தெரிவித்துள்ளார்.
“திருவள்ளுவரை ஒரு துறவி என யாருமே கூறியது கிடையாது. அவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி இருந்ததாகவும் கருத்து இருக்கிறது. இல்லறம் குறித்து அவரைப் போல கவித்துவமாக எழுதியிருப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. திருக்குறளை படித்து புரிந்து கொள்ளக்கூடிய நாம் அவரை துறவியாக பார்த்ததே கிடையாது. திருக்குறளில் எந்த ஒரு மத அடையாளமும் கிடையாது. சனாதனம் உள்ளிட்ட வேறு எந்த மதத்தையுமே நாம் அவர் மீது திணிக்க முடியாது.
“இதை அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். மதத்தை கடந்து மனிதத்தை பேசுவது தான் திருக்குறள். மனிதநேயத்துக்கு ஒரு நிறம் இருந்தால் அதுதான் திருவள்ளுவரின் நிறம்,” என்று சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தபோது கனிமொழி கூறினார்

