சென்னை: புத்தாக்க நிறுவனங்களுக்கு (வளர்ந்து வரும் தொழில் முனைவோர்) உகந்த சூழலை உருவாக்கித் தருவதில் இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத்துறை இது தொடர்பான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வின்போது தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், சந்தைப்படுத்துதலை எளிமையாக்குதல், நிதி ஆதரவு திட்டங்கள் உள்ளிட்ட 25 காரணிகள் குறித்து ஆராயப்பட்டன.
அதன் அடிப்படையில் சிறந்த மாநிலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
குஜராத்தும் கர்நாடகாவும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
இந்நிலையில் தமிழக அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது 7,600 துளிர் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்கள் உள்ளன என்றும் அவற்றுள் கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 2,250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“நாம் நிகழ்த்தியுள்ள பாய்ச்சலுக்கு இதுதான் சான்று. கடந்த ஆட்சியில் 2018ஆம் ஆண்டு தரவரிசையில் கடைசியில் இருந்த தமிழ்நாடு இப்போது முதல் இடத்தை அடைந்துள்ளது.
“புத்தொழில் ஆதார நிதி, பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தொழில் நிதியம் என ஒட்டு மொத்தமாக தமிழக அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டது,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

