கார் வேண்டாம், அரசு வேலைதான் வேண்டும்: ஜல்லிக்கட்டு வெற்றியாளர் கோரிக்கை

கார் வேண்டாம், அரசு வேலைதான் வேண்டும்: ஜல்லிக்கட்டு வெற்றியாளர் கோரிக்கை

1 mins read
e0ddab3e-4c60-46ae-ae74-8dba7eba6087
கார் வென்ற ஜல்லிக்கட்டு வீரர் பிரபாகரன். - படம்: ஊடகம்

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில், 14 காளைகளை அடக்கி புதிய கார் ஒன்றை பரிசாகப் பெற்ற மாடுபிடி வீரர் பிரபாகரன் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை 11 காளைகளை அடக்கிய சின்னப்பட்டி தமிழரசனுக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் காளை சிறந்த காளையாகத் தேர்வு பெற்றது. அதன் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த வீரராக தேர்வான பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, கடந்த சில ஆண்டுகளாக தாம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்ததாகவும் நுணுக்கமான திறமை இல்லாததால் காளைகளை நெருங்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

“இந்த முறை நண்பர்கள் ஊக்கம் அளித்ததால் வெற்றி பெற முடிந்தது. நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். அரசு வேலை வழங்கினால் நன்றாக இருக்கும். ஆடம்பரமான கார் போன்ற பரிசுகள் தேவையில்லை. உயிரைப் பணயம் வைத்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கிறோம்.

“மற்ற விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தேடிச் சென்று அரசு வேலை அளிக்கப்படுகிறது.

“அதே போல் நம்முடைய பாரம்பரிய விளையாட்டில் சாதிப்பவருக்கும் அரசுப் பணி வழங்க வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்,” என்று பிரபாகரன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஜல்லிக்கட்டு