வங்காநரி ஜல்லிக்கட்டை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை

1 mins read
3fd12fd9-aacc-4154-8967-22a5797718b9
கடந்த ஆண்டுகளில் தடையை மீறிப் பிடித்து, விழா கொண்டாடப்பட்ட வங்கா நரி. - கோப்புப் படம்: ஊடகம்
multi-img1 of 2

வாழப்பாடி: வங்காநரியைப் பிடித்து வழிபாடு நடத்துவதைத் தடுக்க வாழப்பாடி பகுதியில் வனத்துறையினர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியிலுள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி காணும் பொங்கல் தினத்தன்று, வங்காநரியை ஊர்வலமாக கொண்டு சென்று, நரியாட்டம், ஜல்லிக்கட்டு நடத்தி வழிபடும் முறை 200 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய வழக்கமாக தொடர்ந்து வருகிறது. நரி முகத்தில் கண் விழித்தால் நல்லது எனும் நம்பிக்கையில் இப்படியொரு சம்பிரதாயம் அவ்வட்டாரக் கிராமங்களில் நடைமுறையில் இருப்பதாக ஊர் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

வங்காநரி அரிய வனவிலங்கு பட்டியலில் இருப்பதால், இந்த நரியைப் பிடித்து நரியாட்டம் நடத்துவதற்கும் வழிபடுவதற்கும் வனத்துறை தடை விதித்துள்ளது.

வனத்துறையினர் விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி வந்தபோதிலும் தடையை மீறி வங்காநரி பிடிக்கப்படும் என்பதால், அப்பகுதியில் இரவு பகலாக காவல் பணியில் வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிராமப்புற தரிசு நிலங்களில் வாழும் வங்காநரியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். வங்காநரியைப் பிடித்து வழிபட, மத்திய, மாநில அரசுகள் சட்ட திருத்தம் செய்து வழிவகை செய்ய வேண்டுமென வாழப்பாடி பகுதி கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
ஜல்லிக்கட்டுநரிதமிழ்நாடு