சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 30 மற்றும் 31ஆம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ஆம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தைப் பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் முன்னிலையாகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாள்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையாகி சாட்சியமளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு, நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில், இரு நீதிபதிகள் உத்தரவின்படி வரும் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் எடப்பாடி பழனிச்சாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

