சென்னை: ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான, தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் கண்டு வருகிறது.
தி.மு.க. தலைவரும் , முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் அந்தக் கடிதத்தில், “ஆன்மீக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுவது, இந்தி - சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை மத்திய பாஜக ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.
“அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர - அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.
“தமிழகத்தின் பல பகுதிகளைக் கடுமையாகப் பாதித்த மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை, வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது இளைஞரணி மாநில மாநாடு.
“இப்போது ஜனவரி 21இல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தம்பி உதயநிதி முன்னெடுத்து வருகிறார்.
“இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்குத் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதைக் காண்கிறேன். அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள திமுக முதன்மைச் செயலாளர் - மாநாடுகளைச் சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான மாண்புமிகு கே.என்.நேரு அவர்களும், சேலம் மாவட்டக் கழக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
“இளைஞரணி மாநில மாநாட்டின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் மாநிலம் தழுவிய அளவில் இருசக்கர வாகனப் பேரணியை கண்கவரும் வகையில் நடத்திக் காட்டினர் இளைஞரணி நிர்வாகிகள். அவர்கள் இன்று (ஜனவரி 18) காலையில் சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து சுடரை ஏந்தி தொடர் ஓட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி தொடங்கி வைத்த இந்தச் சுடரோட்டம் சேலம் வரை தொடர்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன.
“இந்தப் பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாகக் கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது,” என்று முதல்வர் ஸ்டாலின் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

